கணினி அதிகம் பயன்படுத்துவோருக்குப் பார்வை ரீதியாகப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.கணினியால் ஏற்படும் பார்வைத்திறன் பாதிப்புக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்று பெயர். கணினி யுகத்தில் மனிதன் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாகவே இது இருக்கிறது.
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோமின் முதல்நிலை அறிகுறி, கண்களில் வலி ஏற்படுவதாகும். பின்னர், பார்வை மங்குவது, கண்கள் உலர்வது, தலைவலி போன்றவை எட்டிப் பார்க்கும். நமக்கு ஏற்படும் கழுத்து வலிக்கும், முதுகு வலிக்கும், கணினியின் முன் நீண்டநேரம் அமர்ந்து இருப்பதே காரணம்.
நாம் சாதாரணமாக எதையோ ஒன்றைப் பார்க்கும்போது அடிக்கடி கண் சிமிட்டுவோம். இதனால் கண்ணின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படுகிறது, ஆனால் கணினித் திரையை உற்று நோக்கியபடி இருக்கும்போது கண் சிமிட்டுவது இயல்பாகவே குறைந்துவிடுகிறது.
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் பிரச்சினை வராமல் தடுக்க முதலில் கணினித் திரையை சற்று கீழ்நோக்கித் தாழ்வாக வைக்க வேண்டும். கணினித் திரையின் நடுப்பகுதி, நம் கண்களின் நேர் பார்வையில் இருந்து சற்றுக் கீழாக இருக்க வேண்டும். நேருக்கு நேர் கண்களில் படக் கூடாது.
கணினி உள்ள இடங்கள் பொதுவாகக் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். ஏ.சி. அறையில் காற்றில் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். இந்நிலையில், கணினியில் வேலை செய்யும்போது கண்களைச் சிமிட்டுவது சில சமயங்களில் சிரமமாகிவிடும். அப்போது சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு இமைகளுக்குள் விழிகளைச் சுழற்ற வேண்டும்.
கணினித் திரை வெளிப்படுத்தும் ஒளியைக் கட்டுப்படுத்தும் கண்ணாடிகளைக் கணினியில் வேலை செய்யும்போது அணிய வேண்டும். கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களும் இதைப் பயன்படுத்த வேண்டும்.
கண் இமைகளைத் தேவையான அளவுக்குச் சிமிட்டாத போது கண்களில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்து விடுகின்றன. அதனால் கண்களில் வலி ஏற்பட்டுவிடுகிறது. எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாகக் கணினியை விட்டு எழுந்து சிறிதுதூரம் நடந்துவிட்டு வர வேண்டும்.
அவ்வப்போது கணினித் திரையில் இருந்து பார்வையை விலக்கி, சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பொருளைக் கவனிக்க வேண்டும். முடிந்தால் வெள்ளரித் துண்டுகள், தண்ணீரில் நனைத்த துணியால் கண்களுக்கு ஒற்றடம் கொடுக்கலாம்.‘சுவர் இருந்தால்தான் சித்திரம்’ என்பதைப் போலக் கண் பார்வைத்திறன் நன்றாக இருந்தால்தான் கணினியில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற முடியும். எனவே கணினி பயன்படுத்தும் அனைவருமே கண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.