கஜா புயல் பாதிப்பிற்குப்பின் நாகை மாவட்டத்தில் முந்திரி மரங்கள் பூத்து காய்க்க தொடங்கி உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை, புஷ்பவனம், நாகக்குடையான், செட்டிபுலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில், விவசாயிகள், முந்திரி சாகுபடி செய்து இருந்தனர் .
கடந்தாண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் தென்னை மரங்கள், சவுக்கு மரங்கள், உள்ளிட்டவை முறிந்து அழிந்துபோயின. அதே சமயம், முந்திரித்தோப்புகளில் ஒரு சில மரங்கள் மட்டும் கிளைகள் முறிந்த நிலையில் இருந்தன.
அந்த முந்திரி மரங்கள் தற்போது துளிர்விட்டு பூத்து காய்க்க தொடங்கி உள்ளன. கஜா புயலை கடந்து வந்த முந்திரி மரங்கள் பூத்து குலுங்குவதை பார்த்து, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.