புதிய கால் டாக்சி நிறுவனம் தொடங்குவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்யக்கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள ஜே.ஜி.ஆர் டிரான்ஸ்போர்ட் என்னும் நிறுவனம் தமிழகம் முழுவதும் டாக்சி என்ற நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும், அதற்கு முகவர்கள் தேவை எனவும் செய்தி வெளியிட்டது. இதனைப் பார்த்த ராஜேஷ் மணிராஜ் என்பவர், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் அசோகன், சுஜாதா மற்றும் கார்த்திக் ஆகியோரை சந்தித்துள்ளார். அப்போது, தமிழகம் முழுவதும் கால் டாக்சி தொடங்க உள்ளதாகவும், அதில் முகவராக சேர்க்க பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அதனை நம்பிய ராஜேஷ் மணிராஜ் இரண்டு லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார். நீண்ட நாட்களாகியும் நிறுவனத்தை தொடங்காததால் சந்தேகமடைந்த ராஜேஷ் மணிராஜ், தான் ஏமற்றப்பட்டதை அறிந்து மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இதே போன்று பலரும் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.