வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கனிமொழி உட்பட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனுடன், தூத்துக்குடி நாடாளுமன்றத்தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற போது, சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பணம் வழங்கினார்.
இக்காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஏரல் வட்டாட்சியர் முத்துராமலிங்கம் புகாரின் பேரில், தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 7 பேர் மீது திருச்செந்தூர் காவல்நிலையத்தில் 143, 171(E), மற்றும் 171(H) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.