அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான விதிகளை மாற்றியமைத்து திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கு

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான விதிகளை மாற்றியமைத்து திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், தலைமைச் செயலாளர் பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள அரசு வழக்கறிஞர்களுக்கான 202 காலிப்பணியிடங்களை நிரப்ப சுற்றறிக்கை வெளியிட்டது.

முன்னதாக அரசு வழக்கறிஞர்கள் நியமிப்பது தொடர்பான விதிகளையும் மாற்றியமைத்து, கடந்த மே 28ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த சுற்றறிக்கை மற்றும் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் பாண்டியராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான தகுதிகள் குறித்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ள நிலையில், அவற்றைப் பின்பற்றாமலும், விதிகளை மாற்றியும், சுற்றறிக்கையும், அரசாணையும் வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் உரிய தகுதிகள் இல்லாதவர்கள் கூட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Exit mobile version