நெல்லை கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக, நெல்லை கண்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பேசிய நெல்லைக் கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், நெல்லைக் கண்ணனை கைது செய்யக் கோரி, அவரது வீட்டின் முன்பு பலர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை டவுன் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, நெல்லை கண்ணன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் அதிமுகவினர், நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில், மேலப்பாளையம் காவல் நிலையத்தில், நெல்லை கண்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version