தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடியில் கடந்த மே மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், சி.பி.ஐ விசாரணைக்கு தடை கோரியும் கதிரேசன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், இது தொடர்பாக விளக்கமளிக்க மனுதாரருக்கு 4 வார கால அவகாசம் அளித்து உத்தர விட்டனர்.