தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் காவல் அதிகாரியை விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
கடந்த 2007ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தீ வைக்கப்பட்டது. இதில் ஊழியர்கள் கோபி, வினோத், முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட அட்டாக்பாண்டி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து 2010ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அதில், வழக்கில் சாட்சிகளில் பெரும்பாலானவர்கள் பிறழ் சாட்சியாக மாறியதாகவும், குற்றம் நடந்ததற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதால், மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, மீண்டும் வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சிபிஐ மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு அட்டாக்பாண்டி, ஆரோக்கியபிரபு ரூபன், மாலிக்பாட்ஷா உள்ளிட்ட 9 பேருக்கும் தலா 3 ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
சம்பவத்தின் போது அலட்சியமாக இருந்த குற்றச்சாட்டில் காவல் அதிகாரி ராஜாராமுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ராஜாராம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது