சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கக்கோரிய வழக்கு கடந்து வந்த பாதை

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சபரிமலை வழக்கு, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக சபரிமலை வழக்கு கடந்து வந்த பாதை தற்போது பார்ப்போம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இது நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஐதீகம். இதற்கு எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், முதல் முறையாக 1990-ஆம் ஆண்டு சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்யப் பெண்களை அனுமதிக்கக் கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

பெண்களை அனுமதிக்க உத்தரவிடக் கோரிக் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு 1991-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.தேவஸ்தான விதிப்படி, பெண்களை அனுமதிக்க முடியாது எனக் கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளாவில் உள்ள இளம் வழக்கறிஞர்கள் சங்கம் வழக்குத் தொடுத்தது.2 ஆண்டுகள் நிலுவையில் இருந்த வழக்கு 2008ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.8 ஆண்டுகளுக்குப் பிறகு 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.இதனிடையே, சபரிமலையில் நடை திறக்கும் போதெல்லாம் சாமி தரிசனம் செய்யப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி 5 நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.2018-ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி முதல் விசாரணை நடைபெற்று ஆகஸ்ட் 1ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, சபரிமலை கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கித் தீர்ப்பு வழங்கியது.இதில், அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய நான்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். நீதிபதி மல்கோத்ரா மட்டும் பெண்களை அனுமதிக்கக் கூடாது எனத் தீர்ப்பு வழங்கினார்.

சபரிமலை கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யப் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பாஜக, இந்து அமைப்புகள் மாபெரும் அளவில் போராட்டம் நடத்தின.கடும் எதிர்ப்பையும் மீறி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள அரசு தீவிரம் காட்டியது.பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே சில பெண்கள் மட்டும் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப் பரிந்துரைத்துள்ளது. 5-ல் 3 நீதிபதிகள் இந்தப் பரிந்துரையை அளித்தனர். இதையடுத்து சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரிக்கப்படுகிறது.

Exit mobile version