ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஆயுள் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வது தமிழக அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் இது தொடர்பாக ஏற்கனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டம் 361ன் படி ஆளுநரின் முடிவில் அரசினால் தலையிட முடியாது என்றும் இது தொடர்பாக நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.