மும்பை ஆரே குடியிருப்பு அருகே இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை வெட்டுவது தொடர்பான பிரச்சனையை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
மும்பை ஆரே பால்பண்ணைக் குடியிருப்பு அருகே மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை வெட்ட மாநகராட்சியும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் திட்டமிட்டுள்ளன. இதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மீண்டும் போராட்டம் நடத்தக் கூடாது என்கிற நிபந்தனையில் அவர்கள் அனைவரும் நேற்று விடுவிக்கப்பட்டனர். மரங்களை வெட்டத் தடை விதிக்கக் கோரிய மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தலையிடக் கோரி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு மாணவர் அமைப்பினர் கடிதம் எழுதினர். இதையடுத்துத் தாமாக முன்வந்து வழக்கை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம் இன்று இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.