மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த மாணவி மற்றும் அவரது தந்தை மீது பெரியமேடு காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவியின் அழைப்பு கடிதம் மற்றும் ரேங்க் லிஸ்ட்டை சரிபார்த்த போது அவர் கொடுத்தது போலி மதிப்பெண் சான்றிதழ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்களே பெற்றிருந்த மாணவி, 610 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவி மற்றும் அவரது தந்தையும், பல் மருத்துவருமான பாலச்சந்திரன் ஆகியோரை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் மருத்துவ படிப்பிற்கு சீட் வழங்கவில்லை என மாணவியின் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தது தொடர்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மாணவி மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரன் ஆகியோர் மீது, 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.