மென்பொருள் பொறியாளர்களை குறிவைத்து கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்ட, மலேசிய நிறுவனத்தின் மீது, சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவர், மலேசியாவைச் சேர்ந்த கியூ நெட் நிறுவனம் மீது, வடபழனி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதில், தன்னிடம் கியூ நெட் நிறுவனத்தின் பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறி 3 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, கியூ நெட் என்ற, எம்.எல்.எம் நிறுவனம் மீதும், அதன் உரிமையாளர் விஜய் ஈஸ்வரன் மீதும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிறுவனத்திற்கு இந்தியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் கிளைகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மென்பொருள் பொறியாளர்களை குறிவைத்து கோடிக் கணக்கில் மோசடி செய்ததும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.