பால் விலை உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட மனுவை தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை பசும் பாலுக்கு லிட்டருக்கு 4 ரூபாயும், எருமை பால் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் என உயர்த்தப்பட்டது. அதன்படி ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடந்த 19ம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருவண்ணாமலையைச் சேர்ந்த முனி கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, எந்த ஆதாரங்களும் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இந்தநிலையில் வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.