ஏலக்காய் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியது

போடி ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தில், ஏலக்காய் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடும் வறட்சி நிலவுதால், ஏலத் தோட்டங்களில் ஈரப்பதமின்றி வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், ஏலக்காய் விவசாயம் கடும் பாதிப்பிற்குள்ளானது. இடுக்கி மாவட்டம் புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் தனியார் நிறுவனங்கள் மூலம் மின்னணு ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு, 80 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டு ஏலம் நடைபெறும். இந்த நிலையில் கடந்த 2019 ஜனவரி மாதம் முதல், சந்தைக்கு ஏலக்காய் வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது, தினமும் சராசரியாக 15 ஆயிரம் கிலோ ஏலக்காய் மட்டுமே விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் போடியில் நேற்று13,951 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் சராசரி தரம் கிலோ ஒன்றுக்கு 3644 ரூபாய்க்கும், உயர்தரம் கிலோ ஒன்றுக்கு 5,000 ரூபாய்க்கும் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 4 மடங்கு அதிகமாகும்.

Exit mobile version