கேரளாவில், ஏலக்காய் கிலோவிற்கு 3 ,500 ரூபாய் என்ற புதிய உச்ச விலையை எட்டியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இடுக்கி மாவட்டம் வண்டன்மேட்டில், ஏலக்காய்களை விற்பனைக்கு பதிவு செய்யும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய்கள் தரம் பிரிக்கப்பட்டு, தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏலக்காய் கிலோவிற்கு அதிகபட்ச விலையாக 3,500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. நடப்பு காலத்தில் ஏலக்காய் விளைச்சல் குறைவாக இருந்தாலும், விலை அதிகமாக இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் பயிரிடப்படும் ஏலக்காய்களுக்கு சர்வதேச சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.