உத்தரவை மீறி, முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் வாகன நிறுத்தும் இடத்தின் கட்டுமானங்களை அமைக்கும் கேரள அரசின் செயலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு தரப்பில் கட்டப்பட்டு இருக்கும் கட்டடங்களை நீக்க கோரியும், வாகன நிறுத்தம் கட்ட தடைகோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையில் இறுதி உத்தரவு வரும் வரை முல்லை பெரியாறு பகுதியில் புதிய கட்டடங்களை கட்டக்கூடாது என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருந்தது.
ஆனால் உச்சநீதிமன்றதீர்ப்பை கேரள அரசு கருதாமல், தொடர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. அப்போது வாகன நிறுத்தத்தின் கட்டுமானங்கள் எதையும் செய்யவில்லை என கேரளா அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அதை மறுத்து தமிழக அரசின் சார்பில் ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டன.
இதைகேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் அதனை பின்பற்ற கூட மாட்டீர்களா என கேரள அரசைக் கண்டித்தது. இதுகுறித்தான பதிலை 15 நாட்களுக்குள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.