சிதம்பரம் நடராஜர் கோயில், மார்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா, கடந்த 1 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தனர். அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான மார்கழி ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறுகிறது. அதையொட்டி, கடலூர் மாவட்டத்தில், நாளை ஒருநாள் மட்டும் உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.