கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கவும், நிவாரணத் தொகையை பெற, இறப்பு சான்றிதழில் கொரோனா காரணம் என குறிப்பிடவும், மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து இரண்டு வாரங்களுக்கு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 4 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்க முடியாது என மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தில் இயற்கை பேரிடர், நிலநடுக்கம், வெள்ளம் ஆகியவற்றுக்கு மட்டுமே நிவாரணம் வழங்க முடியும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.