உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்: கடைசி நாளில் குவிந்த அதிமுக வேட்பாளர்கள்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில், கொண்டம்பட்டி, முள்ளுப்பாடி, கோடங்கிபாளையம், வடபுதூர், சொக்கனூர் உட்பட 34 ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்லுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, அதிமுக வேட்பாளர்கள் சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ராதாமணி, இரண்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு கலாமணி மற்றும் துரைசாமி ஆகியோர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை நேரில் சந்தித்த கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வாழ்த்துகளை கூறினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி உள்ளதால் இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.

அதேஒஈல் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுத்தாக்கல் செய்ய தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், அதிமுக ஒன்றிய செயலாளர் செங்கான் தலைமையில் கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினர், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 58 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 31 கவுன்சிலர் பதவிக்கும் வேட்புமனு  தாக்கல் செய்தனர். இதில், கலந்து கொண்ட அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version