புகை மற்றும் போதை பழக்கத்தால் ஏற்பட்டு வந்த புற்றுநோய், தற்போது துரித உணவு மற்றும் நொறுக்குதீனிகளை சாப்பிடுவதாலும் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. அது குறித்த செய்தி தொகுப்பு
உலகம் முழுவதும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நாளில், உலக மக்களுக்கு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அனைத்து மருத்துவமனைகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நோய்களில் மிகவும் பழமையான, வீரியம்மிக்க நோய் புற்றுநோய் என்பார்கள். முன்பெல்லாம் 60 வயதுக்கும் அதிகமானவர்களே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் புற்றுநோயால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
புற்று நோய்க்கு மிக முக்கிய காரணமாக போதை மற்றும் புகைப்பழக்கம் இருந்து வந்த நிலையில், அது தற்போது முறையற்ற உணவு பழக்க வழக்கம், துரித உணவு போன்ற பழக்கங்களாலும் வயிறு சார்ந்த புற்றுநோய்கள் அதிகரித்திருப்பதாக எச்சரிக்கிறார் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மருத்துவர் செந்தில்நாதன்
புற்றுநோய் குறித்து முறையான விழிப்புணர்வு இருந்தால் அதற்கான சிகிச்சைகளை பெற்று அதில் இருந்து மீண்டு வர முடியும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். முறையான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர் அனிதா ரமேஷ்.