எம்பிக்களுக்கு பாராளுமன்ற உணவகத்தில் வழங்கப்பட்டு வரும் சலுகைகளை ரத்து செய்வது என பாராளுமன்ற எம்பிக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் எம்பிக்களுக்காக இயங்கும் உணவகங்களில் சலுகை விலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன. அதாவது 80 சதவீதம் குறைக்கப்பட்டு 20 சதவீத விலையிலேயே உணவு விற்கப்படுகிறது. இந்நிலையில் இந்த உணவகங்களில் சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தால் 5 ரூபாயாக இருக்கும் காபி விலை 25 ரூபாயாகவும், 14 ரூபாயாக உள்ள சூப்பின் விலை 70 ரூபாயாகவும் உயரும். அதேபோல் தோசையின் விலை 12 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக அதிகரிக்கும். 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சப்பாத்தி 10 ரூபாய்க்கும் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சிக்கன் கறி 250 ரூபாய்க்கும் விற்கப்படும்.
41 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சிக்கன் கட்லட் 205 ரூபாயாக்கும், 60 ரூபாய்க்கு விற்பனையாகும் சிக்கன் தந்தூரி 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். இதேபோல் 40 ரூபாய்க்கு விற்கப்படும் மீன்கறி 200 ரூபாய்க்கும், ஹைதாராபாத் பிரியாணி 65 லிருந்து 325 ரூபாயாகவும் விலை உயர்த்தி விற்கப்படும். மட்டன் கறியின் விலை 45 ரூபாயிலிருந்து 225 ரூபாயாக உயரும்.
மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 18 கோடி ரூபாய் வரை மிச்சமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.