தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும், விவசாய கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்வது பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது மற்றும் விவசாய கடனை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று கூறினார்.
தனியார் துறை வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழக்க புதிய சட்டம் இயற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு, மத்திய அரசும் குடியரசுத் தலைவரும் பரிந்துரைக்க வலியுறுத்தப்படும். 3 புதிய நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார். அதன் ஆங்கில உரையை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.