தமிழகத்தில் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலாவது மற்றும் இரண்டாவது ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தின் அக மதிப்பீட்டில் இருந்து 70 சதவீதமும் கணக்கிடப்பட்டு, முதன்மை பாடங்களுக்கும், மொழிப்பாடங்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
துணைப்பாடங்கள் மற்றும் விருப்பப்பாடங்களுக்கு 100 சதவீதம் அக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
செயல்முறை தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தால், ஆய்வக பதிவேட்டின்படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மதிப்பீட்டு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்கள், பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்று மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ளலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மதிப்பெண்கள் குறைவாக உள்ள மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் அளித்து அவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என அரசு குறிப்பிட்டுள்ளது.