தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சொந்தமான, கடல்சார் கல்லூரியின் அங்கீகாரத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை ரத்து செய்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி, அவரது சொந்த மாவட்டமான சிதம்பரத்தில், மறைந்த காங்கிரஸ் தலைவர் காமராஜ் பெயரில் கடல்சார் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். அந்தக் கல்லூரியின் உரிமையாளர்களாக அவரது மனைவி மற்றும் மகள்கள் உள்ளனர். கப்பல் தொழில்நுட்பம் தொடர்பாக பயிற்சி அளிக்க இக்கல்லூரியில் மாணவர்களிடம் அதிக கட்டணமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தன. மேலும் பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்ற தர 3 லட்சம் ரூபாய் வரை கல்லூரி நிர்வாகம் கட்டணம் பெற்றதாகவும் புகார் வந்தன. மேலும், பணத்தை பெற்றுக் கொண்டு பயிற்சி அளிக்காமல் கல்லூரி நிர்வாகம் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கல்லூரி மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் குவிந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக அகில இந்திய கப்பல் துறை இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டது. அதில், உண்மைத் தன்மை அறியப்பட்டதால், கே.எஸ்.அழகிரிக்கு சொந்தமான கடல்சார் கல்லூரிக்கான அங்கீகாரத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.