அன்பளிப்பு பொருட்கள் இறக்குமதியில் முறைகேடு செய்தால் சுங்க வரிவிலக்கு சலுகை ரத்து செய்ய பரிசீலனை

அன்பளிப்பு பொருட்கள் இறக்குமதியில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றிற்கான சுங்கவரி விலக்கு சலுகையை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அன்பளிப்பு பொருட்களுக்கு தற்பொழுது விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.இதை பயன்படுத்தி சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆன்லைன் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக தொடர் புகார்கள் எழுப்பப்படுகின்றன. இந்தியாவில் இருந்து சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆன்லைன் நிறுவனங்களுக்கு தினமும் ஆர்டர்கள் அளிக்கப்படும் நிலையில், இந்த வரிவிலக்கை பயன்படுத்தி வரி ஏய்ப்பு நடத்தப்படுவதாக தொழில்துறையினர் மத்திய அரசுக்கு இந்த புகார்களை அளிக்கின்றனர்.

இதையடுத்து அன்பளிப்பு பொருட்களுக்கு அளிக்கப்படும் சுங்கவரி சலுகையை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி துறை செயலர் தலைமையிலான நிலைக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.வரிச் சலுகையை ரத்து செய்யலாமா அல்லது ஒருவர் ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே அன்பளிப்பு பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கலாமா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து இறுதி முடிவை மத்திய அரசு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version