பனை ஒலைகளை கொண்டு இப்படிலாம் தயாரிக்க முடியுமா….!

ராமநாதபுரம் அருகே பெண்கள் வீட்டில் முடங்கி கிடக்காமல் தங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கண்களை கவரும் கலைப் பொருட்களை, பனை ஓலைகளை கொண்டு செய்து வருகின்றனர். அதுகுறித்த ஒரு சிறப்பு தொகுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள அழகன்குளம், பனைக்குளம் மற்றும் சித்தார்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்கள், சுய உதவி குழு மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலமாகவும் பனை ஓலை பொருட்களை உற்பத்தி செய்து அசத்தி வருகின்றனர்.

கண்களைக் கவரும் இந்த கலைப்பொருட்களை உருவாக்கும் மூலப் பொருளாக இருப்பவை, பனையின் இளம் ஓலைகள். இதனை குருத்து ஓலை என்று அழைக்கிறார்கள். அந்த ஓலையை இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கிறார்கள்.

ஓலை நன்றாக காய்ந்ததும், பொருட்கள் செய்யும் பதத்துக்கு வந்து விடுகிறது. முதலில் ஓலைகளில் உள்ள ஈர்க்குகளை சிறிய கத்தி மூலம் பிரித்து எடுக்கிறார்கள். பின்னர் செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்ப ஓலைகளை சிறிய அளவில் வெட்டுகின்றனர்.

பெரிய அளவிலான கலைப்பொருட்கள் தயார்செய்யும்போது பனை ஓலை பெரிய அளவிலும், சிறிய பொருட்கள் தயார் செய்ய பனை ஓலைகளை சிறிய அளவிலும், தேவைக்கு தக்கபடி தனித்தனியாக வெட்டி எடுக்கிறார்கள்.
பனை ஓலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஓலைகளை அழகான முறையில் வண்ணச் சாயம் பூசி வண்ண பெட்டிகள் செய்து வருகின்றனர். பனை ஓலைகளில் பயன்படுத்த மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு போன்ற நிறங்களில் சாயங்கள் பூசப்படுகின்றன.

நன்றாக காய்ந்த உடன் அந்த ஓலையில் இருந்து தேவையான பொருட்கள் செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், தற்போது பிளாஸ்டிக்கில் என்னென்ன பொருட்கள் உருவாக்கி சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறதோ, அதையெல்லாம் தாண்டி அனைத்து பொருட்களையும் பனை ஓலை மூலமாக செய்து காட்சிப்படுத்தி காட்டுகின்றனர்.

இதில் மிகவும் ஆச்சரியப்படக் கூடிய விஷயமாக பெண்கள் தலையில் சூடக்கூடிய பூக்களைக்கூட பனை ஓலையில் வண்ண வண்ண நிறத்தில் செய்து அசத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் வெயிலுக்கு இதமாக பனை ஓலைத் தொப்பி, பூக்கூடை பென்சில் பை என வகைவகையான பனைப் பொருள்களை இவர்கள் செய்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு தங்களின் உற்பத்தி பொருட்கள் அதிக அளவில் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், எனவே பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் மும்முரம் காட்டி வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றனர் பெண்கள்.

Exit mobile version