இந்தியாவில், கொரோனா நோயாளிகளின் அவசர கால மருத்துவப் பயன்பாட்டிற்காக, கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு, மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராஜெனிகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. கோவிஷீல்டு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்தை, இந்தியாவில் புனே நகரில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரிட்டனில், கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும், அவசர கால பயன்பாட்டுக்காக, கோவிஷீல்டு தடுப்பூசியை அனுமதிக்கக் கோரி, சீரம் நிறுவனம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடமும், மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடமும் விண்ணப்பம் செய்தது.
சீரம் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலித்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அவசர கால மருத்துவப் பயன்பாட்டிற்காக, கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பரிந்துரையை பரிசீலிக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், விரைவில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கோவிஷீல்டு தடுப்பூசியின் 5 கோடி டோஸ் மருந்து அளவிற்கு, தங்களிடம் கையிருப்பில் உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கப்படும் பட்சத்தில், இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்…