அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இடைத் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் கான்வில்கர், அஜய் ரஸ்தோகி அமர்வு, குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என தெரிவித்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் 4 வாரத்திற்குள் டெல்லி உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், அவ்வாறு முடிக்காவிட்டால், தேர்தல் ஆணையமே இதுகுறித்து முடிவெடுக்கலாம் எனத் தெரிவித்தனர்.