தயாநிதி மாறன் மற்றும் இரு நிறுவனங்களுக்கு எதிராக வருமானவரித்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடந்த 2015 ம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி,தயாநிதி மாறன் மற்றும் சன் டைரக்ட் டி.டி.ஹெச் , சவுத் ஆசியன் எப்.எம் ஆகிய நிறுவனங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதில் , 2008- 2009, மற்றும் 2009- 2010 ஆகிய இரு நிதி ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வருமானவரித்துறை கேட்டிருந்தது.
இதை எதிர்த்து தயாநிதி மாறன் மற்றும் இரு நிறுவன நிர்வாகங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் விதிகளுக்கு முரணாக வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்ய வேண்டும் என கேட்கப்பட்டது
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமானவரித் துறையின் சார்பில் அனுப்பப்படும் நோட்டீஸ்களுக்கு ஆரம்ப நிலையில் உயர் நீதிமன்றத்தை நாட முடியாது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அரசின் உயர் பதவிகளில் இருந்த நபர்களுக்கு எதிராக அரசுத் துறைகள் நோட்டீஸ் அனுப்பும் பொழுது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை அணுக கூடாது என அறிவுறுத்தினார்.
வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் அதற்கான முகாந்திரம் இந்த வழக்கில் இல்லை எனவும் தெரிவித்து தயாநிதிமாறனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதேபோன்று சவுத் ஆசியன் எப்.எம் மற்றும் சன் டைரக்ட் டி.டி.ஹெச் நிறுவனங்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.