சட்டவிரோதமான போலி இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற உத்தரவு !

தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, காணிக்கை வசூல் செய்து மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் அமர்வு, தமிழகம் முழுவதும் கோவில் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், போலி இணையதளங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாயை, சைபர் கிரைம் காவல்துறை மூலமாக கணக்கிட்டு, அவற்றை பறிமுதல் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாக, கோவில்களின் இணையதள முகவரிகளை தெரியப்படுத்தி, போலி இணையதள முகவரிகள் எந்த வகையில் இருந்தாலும், முடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். போலி இணையதளங்கள் குறித்து புகாரளிக்க தனி அலுவலரை நியமிப்பதோடு, தனி தொலைபேசி எண்ணையும் உருவாக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Exit mobile version