தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் பொதுச் சின்னத்தில் மட்டுமே போட்டியிட முடியும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. இந்நிலையில் தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதிவு செய்யப்படாத கட்சிக்கு பொதுச் சின்னம் வழங்க சட்டத்தில் இடமில்லை என்றும், தினகரன் தரப்பில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் சுயேட்சைகள் என்பதால், அவருக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுத்து விட்டனர்.
அமமுகவுக்கு பொதுச்சின்னத்தை ஒதுக்க பரிந்துரைத்த நீதிபதிகள், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.