அரசு நிகழ்ச்சிகளை அரசியல் மேடையாக மாற்றலாமா? – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் காட்டமான கேள்வி??

அரசு நிகழ்ச்சிகளை அரசியல் மேடையாக மாற்றலாமா என ஆளுங்கட்சியினருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தமிழக அரசின் சார்பில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாயவிலை கடைகள் மூலம் கடந்த 15ம் தேதி முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.

ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களுடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோரை அழைத்துச் சென்று கொரோனா நிதியை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஆளும்கட்சியினர் மீறுவதாக கூறி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த தேவராஜ், பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லட்சுமி நாராயணன், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருவதை வரவேற்பதாகவும், ஆனால் நிவாரணம் வழங்கும் விதத்தில் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாகவும் வாதிட்டார்.

ரேஷன் கடைகளில் நிவாரண தொகையை வழங்கும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், தங்களது கட்சியினருடன் பாதுகாப்பான இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் நிற்பதாக குற்றம்சாட்டினார்.

சென்னை ஆயிரம் விளக்கு அண்ணா நகர், ராதாபுரம், ஆகிய தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நிவாரணம் வழங்கும்போது, ஆளுங்கட்சியினரை அழைத்துச் சென்று நிவாரணம் வழங்குவது தொடர்பான புகைப்படங்களை நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டி மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும்” ராதாபுரம் தொகுதியில் சட்டமன்ற சபாநாயகர் ஏராளமான தொண்டர்களை அழைத்துக்கொண்டு நிவாரணம் வழங்கியதாகவும், அங்கு திமுகவினர் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காமலும், அதில் ஓரிருவர் கூட முக கவசம் அணியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சபாநாயகர் என்பவர் கட்சி சார்பற்றவர் என்றும், சபாநாயகரை வரவேற்று ஆளும்கட்சியின் சின்னம் கொடி அச்சிட்ட பேனர்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே நீதிமன்றத்தில் கடந்த முறை முந்தைய அரசாங்கம் நிவாரணம் வழங்கும்போது, தற்போது ஆளுங்கட்சியாக இருப்பவர்கள்தான் வழக்கு தொடர்ந்தனர் என்பதும் கோடிட்டு காட்டப்பட்டது.

கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் பங்கேற்ககூடாது.

கட்சி சின்னம் கொடி எந்த விதத்திலும் ரேஷன் கடைகளில் தெரியும் வண்ணம் நடைபெறக்கூடாது என வாதிட்டு திமுகவினர் உத்தரவை பெற்றதாகவும், ஆளுங்கட்சியான பின்னர், தற்போது அந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, தலைமை நீதிபதி, அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரத்தை நோக்கி கடந்த முறை நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுங்கட்சியினர் இவ்வாறு செய்வதை தடுக்க வேண்டும் என்று கூறித்தானே உத்தரவை பெற்றீர்கள்?

தற்போது நீங்கள் ஆளுங்கட்சியாக வந்ததும் அந்த உத்தரவை மீறலாமா? அரசு நிகழ்ச்சியை அரசியல் மேடை ஆக்கலாமா? இது முறைதானா?என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இது குறித்து அரசிடம் தகவல் பெற்று திங்கட்கிழமை தெரிவிப்பதாக கூறினார்.

இதைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமைக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பேசிய அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் வழக்கறிஞருமான இன்பதுரை, சபாநாயகர் என்பவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக செயல்படவேண்டிய நிலையில், திமுகவினர் அவரை வரவேற்று பேனர் வைத்தது விதிமீறல் என குற்றம்சாட்டியுள்ளார்.

Exit mobile version