பெட் பாட்டில்களில் விற்பனையாக உள்ள ஒட்டகப்பால்

பிரபல அமுல் பால் நிறுவனம் முதன்முறையாக 200 மில்லி லிட்டர் பெட் பாட்டில்களில் ஒட்டகப் பாலை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அமுல் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக குஜராத் மாநிலத்தின் காந்திநகர், அகமதாபாத் பகுதிகளில் ஒட்டக்கப்பாலை விற்பனைக்கு கொண்டு வந்தது. முதல்கட்டமாக 500 மில்லி லிட்டர் பெட் பாட்டிலில் ஒட்டகப்பால் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு கிடைத்த வரவேற்பால் அடுத்ததாக 200மில்லி லிட்டர் பெட் பாட்டிலை அறிமுகப்படுத்த உள்ளதாக அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது. 200 மில்லி லிட்டர் பெட் பாட்டிலின் விலை 25 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாட்டில் ஒரு வாரத்திற்குள் விற்பனைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பால் 3 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த உகந்ததாக இருக்கும் என்பதால் இதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்துவது அவசியம் எனவும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சர்க்கரை நோயாளிகள் பயன்பெறும் வகையில் ஒட்டகப் பாலை அறிமுகம் செய்துள்ளதாகவும், ஒரு லிட்டர் ஒட்டகப் பாலில் 52 யூனிட் அளவுக்கு இன்சுலின் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுவதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Exit mobile version