ஆட்டிஸம் பாதிப்பு உள்ள குழந்தைக்கு ரயிலில் வந்த ஒட்டக பால்

ஆட்டிஸம் பாதிப்பு உள்ள குழந்தைக்கு தேவையான ஒட்டகப்பாலை ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு வரவழைத்து கொடுத்து உதவி செய்துள்ளனர், சில மனித நேயம் மிக்க அதிகாரிகள். மும்பையை சேர்ந்த நேகா குமாரிக்கு ஆட்டிஸம் குறைபாடு உள்ள மூன்றரை வயது மகன் உள்ளான். பல உணவுப்பொருட்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாததால் மகனுக்கு ஒட்டகப்பாலை கொடுத்து வந்துள்ளார் நேகா. ஆட்டிஸம் குறைபாட்டை ஓரளவிற்கு தணிக்கும் ஆற்றலும் ஒட்டகப்பாலுக்கு உண்டு எனவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் ஊரடங்கால் நேகா குமாரிக்கு ஒட்டகப்பால் கிடைக்காததால், ஒட்டக வளர்ப்புக்கு பேர் போன ராஜஸ்தான் மாநிலம் சத்ரியில் இருந்து ஒட்டகப்பாலை பெற்றுத்தருமாறு அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடிக்கு நேகா குமாரி இணையதளம் மூலம் வேண்டுகோள் விடுத்தார். இணையத்தில் வைரலான இந்த வேண்டுகோளை கவனித்த ஒடிசா மாநில ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா, அந்த குழந்தைக்கு உதவ முன்வந்தார்.  இதனையடுத்து அருண் போத்ரா, ராஜஸ்தானை சேர்ந்த ரயில்வே அதிகாரியான தருண் ஜெயினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அக்குழந்தைக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்ற தருண் ஜெயின், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து மும்பை செல்லும் சரக்கு ரயிலில் ஒட்டகப் பாலை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். சத்ரியை சேர்ந்த ஒட்டகப்பால் வியாபாரியை கொண்ட ஜெயின் அவரிடம் இருந்து 20 லிட்டர் ஒட்டகப் பால் மற்றும் 20கிலோ ஒட்டகப்பால் பவுடரை வழங்க முன்வந்தார். இதனையடுத்து பஞ்சாபிலிருந்து வந்த சரக்கு ரயிலில் வியாபாரி ஒட்டகப்பால் மற்றும் ஒட்டகப் பால் பவுடரை ரயில்வே அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

வழக்கமாக பல்நா ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிற்காத நிலையில், நேகவின் வேண்டுகோளுக்காக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, கடந்த 9ம் தேதி மும்மை சென்றடைந்த சரக்கு ரயிலில் இருந்து ஒட்டகப்பால் மற்றும் ஒட்டகப் பவுடரை நேகா குமாரி பெற்றுக் கொண்டார்.  தன் குழந்தைக்காக தனி அக்கறை எடுத்துக்கொண்ட காவல்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கும், அவர் நன்றி தெரிவித்தார். இதற்கிடையில், மும்பையை சேர்ந்த மற்றொரு பெண் தனது ஆட்டிஸம் பாதித்த குழந்தைக்கும் ஒட்டகப் பால் வேண்டுமென ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ராவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தகவலறிந்த நேகா குமாரி சற்றும் தயங்காமல் தனது குழந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒட்டகப்பாலையும் மற்றும் ஒட்டகப் பால் பவுடரையும் அப்பெண்ணுடன் பகிர்ந்துள்ளார்.  இக்கட்டான சூழலில் அதிகாரிகள் உதவி செய்த நிலையில், நேகா குமாரியும் தனது செயலால் மனித நேயத்தை வெளிப்படுத்தி நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

Exit mobile version