முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆய்வு நடத்த நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. அந்தக்குழு ஆய்வுகளை நடத்தி அதற்கான அறிக்கையை அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடு கிடைக்கும். மேலும், சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை தடுக்க, என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.