விவசாயிகளுக்கு கடந்த ஆண்டை விட, உர மானியத்தை 20 சதவீதம் அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம், டெல்லியில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்க வழிவகை செய்யப்படும். அதே போன்று கடந்த ஆண்டுகளை விட விவசாயிகளுக்கான உர மானியத்தை 20 சதவீதம் அதிகரித்து 22 ஆயிரத்து 875 கோடி ரூபாய் ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 30லிருந்து 33ஆக உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிட்பண்ட் திருத்த மசோதா-2019ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், சிட்பண்ட் மோசடிகள் தடுக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்படுவர். இது போன்று மேலும் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.