பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் நடைமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முன் வருபவர்களுக்கு அழைப்பு விடுப்பது, தனியார் மயமாக்கும் போது அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்குபவர்களுக்கு அளிக்கப்படும் ஒப்பந்தம் தொடர்பான நடைமுறை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவை, இந்த மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2018-19 ஆம் நிதியாண்டில் மட்டும், ஏர் இந்தியா, 8 ஆயிரத்து 556 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது. அந்த நிறுவன ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.