ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், ஹில்வில்லே வனப்பகுதியில், காட்டுத்தீ பரவியது. கட்டுக்கடங்காத தீயால், ஒன்றரைக் கோடி ஏக்கர் பரப்பளவுள்ள வனப்பகுதிகள் தீயில் எரிந்து நாசமாயின. வேகமாகப் பரவி வரும் தீயால், அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவிலும், ஜப்பானிலும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்த மாதத்தில் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்திருந்தார். அதேசமயம் இந்தியாவிற்குச் சொந்தமான 2 சிலைகளை ஒப்படைப்பதாகவும் கூறியிருந்தார். தற்போது காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், ஈடுபட்டுள்ளதால், ஸ்காட் மோரிசன் தனது பயணத்தைத் தள்ளி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.