சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல இந்த வரிகளை தங்கள் சாதனையின் மூலம் அடிக்கடி சிலர் நினைவுபடுத்துகின்றனர். இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் பாப்பாத்தி என்ற 60 வயது மூதாட்டி. சிறந்த விவசாயி என பிரதமர் கையால் விருது வாங்கிய பெண் விவசாயி குறித்த ஒரு செய்தித் தொகுப்பில் காணலாம்.
நாமக்கல் மாவட்டத்தின் பரமத்திவேலூர் அருகேயுள்ள குஞ்சம்பாளையம் சீராப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தின் ஆண்டு மழை அளவு 716 புள்ளி 54 மில்லி மீட்டராக உள்ளது. ஆண்டு மழையளவு சராசரியை விடக் குறைவாக உள்ளதால் காவிரி ஆறு மற்றும் ஆழ்துளைக் கிணற்று நீரையே பாசனத்திற்கு இப்பகுதி மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இதனால் குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படும் மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், மஞ்சள், கரும்பு, எள், நிலக்கடலை போன்ற பயிர்களை அப்பகுதி மக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிடைக்கும் தண்ணீரை சரியாக பயன்படுத்தி, எள் விவசாயத்தில் சாதனை படைத்துள்ளார் குஞ்சாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பாப்பாத்தி. 31 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டாலும் தனியாளாய் நின்று விவசாயம் செய்து வரும் அவருக்கு மகன் ரமேஷ் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
நடப்பு வருடம் ஒரு ஹெக்டர் நிலத்தில் எள்ளை சாகுபடி செய்தார். 85 நாள் பயிரான கருப்பு எள் நன்கு விளைந்து, ஹெக்டேருக்கு 1,210 கிலோ வரை மகசூல் கிடைத்துள்ளது. சரியான முறையில் திட்டமிட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டதால் லாபம் ஈட்ட முடிந்ததாக பாப்பாத்தி தெரிவித்தார். பாப்பாத்தியின் சாதனையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு கிரிஷி கர்மான் விருது வழங்கியுள்ளது. கர்நாடகாவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பாப்பாத்திக்கு விருது வழங்கி கெளரவித்தார். சுமார் 2 லட்ச ரூபாய்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
தனது தாயார் வயதான காலத்திலும் தொடர்ந்து விவசாயம் செய்து வருவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறும் பாப்பாத்தியின் மகன் ரமேஷ், விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கான தொழில்நுட்பங்களை வழங்கியதோடு, ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கி வரும் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்.
பரமத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாகவும் பாப்பாத்தி அம்மாளுக்கு வழங்கிய தொழில்நுட்ப உதவிகளை அவர் சரியாக பயன்படுத்தி வந்ததாகவும் வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிரதமர் கையினால் பாப்பாத்தி அம்மாள் விருது பெற்றது தங்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
வயதான பெண்மணியாக இருந்தாலும் விவசாயத்தில் சாதனை படைத்து பிரதமரிடம் விருது பெற்றுள்ள பாப்பாத்திக்கு அனைத்து தரப்பு மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சாதிப்பதற்கு வயது ஒரு தடையற்ற என்ற வாசகத்தை உணர்த்தி வரும் மூதாட்டிகளின் வரிசையில் பாப்பாத்தியும் இடம்பிடித்துள்ளார்.