பொம்மலாட்டம் மூலம் பாடம் நடத்தும் தலைமையாசிரியர்

மதுரை திருஞானம் துவக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் பொம்மலாட்டம் மூலம் மாணவர்களுக்கு எளிதாக பாடம் நடத்தி வருகிறார். இது குறித்த செய்தித் தொகுப்பு

தனது பள்ளியைச் சார்ந்த மாணவ மாணவியர் வாழும் பகுதிகளுக்கு நேரடியாகச் செல்லும் சரவணன், பொம்மலாட்டம் மூலமாக பெண்கல்வி, இளவயது திருமணம், பாலியல் சுரண்டல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

சரவணனுடன் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து இப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை இதற்கு முன்னால் தெரு நாடகங்கள் மூலமாக செய்து கொண்டிருந்தார். பின்னர் இதற்காகவே ஹைதராபாத் சென்று பொம்மலாட்டம் தொடர்பாக பிரத்யேக பயிற்சி எடுத்து வந்தார்.

பொம்மலாட்டம் மூலமாக ஒரு விஷயத்தை விளக்கி கூறும் போது மாணவ மாணவியரின் கவனம்
சிதறாமல் ஒருமுகப்படுவதாக சரவணன் தெரிவிக்கிறார். மேலும் இதற்கு தேவையான பொம்மைகளை குழந்தைகளையே செய்ய வைத்து அவர்கள் மூலமாகவே இந்த விழிப்புணர்வு நாடகங்களை நடத்துகிறார்.

இதுபோன்ற உத்தியின் மூலமாக பாடங்களை மிக எளிதாக மாணவர்களுக்கு கற்பிக்க முடியும் எனக் கூறும் அவர் அனைத்து ஆசிரியர்களும் கற்றுக்கொண்டு இந்த முயற்சியை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கிறார்

சரவணனைப் பின்பற்றி மற்ற ஆசிரியர்களும் பொம்மலாட்டம் முறையில் திரைக்குப் பின்னால் மழலை மொழியில் அழகாக பாடம் நடத்துவதைக் காணும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது

தங்களது பாடங்களை எவ்வாறு பயில வேண்டும் அதையும் கதையோடு சேர்த்து அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் நடத்தி வருகிறார். பள்ளியின் வகுப்பறை முழுவதுமே மாணவ-மாணவியர்கள் தயார் செய்த பொம்மைகளும் விளக்கவுரைகளும் செய்முறையாக அவர்கள் ஒவ்வொரு நாளும் செய்யக் கூடிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

பொம்மலாட்ட முறைக்கு வரவேற்பு தெரிவிக்கும் மாணவர்கள் இதனால் அதிக மதிப்பெண்கள் பெற முடிவதாக தெரிவிக்கின்றனர்

தான் கற்ற கலையை மாணவ மாணவியர்களுக்கு கற்றுக்கொடுத்து நாடக வடிவில் பாடத்தைப் புகட்டும் இந்த ஆசிரியர்களை பணி பாராட்டுக்குரியது

Exit mobile version