கனமழை பெய்து வருவதால் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள வீராணம் ஏரிக்கு வரும் 5 ஆயிரம் கனஅடி நீர், ஏரியின் பாதுகாப்பு கருதி முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாகப் பல்வேறு நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கனமழையால் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 47 அடியை எட்டியுள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்புக் கருதி, வெள்ளியங்கால் ஓடை வழியாக மூவாயிரம் கன அடி நீரும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ் மதகு வழியாக 2 ஆயிரத்து 500 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு வரும் ஐயாயிரம் கனஅடி நீர் முழுமையாக வெளியேற்றப்படுவதால் ஏரிக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஏரியைக் கண்காணித்து வருகின்றனர்.