நடந்து முடிந்த நாங்குநேரி விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 21 ஆம் தேதி விக்கரவாண்டி மற்றும் நாங்குநேரி நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதனை அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கவிந்தப்பாடியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுகவினர் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோயமுத்தூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மேலும், செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கு பெரும் அளவில் பொதுமக்கள் ஆதரவு தந்துள்ளார்கள் என தெரிவித்தார்.
அதிமுக வெற்றியை தொடர்ந்து கோவையில் உள்ள உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி இடைதேர்தலில் அதிமுக அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதையடுத்து சேலத்தில் அதிமுகவினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம் முன்பு, மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர் அப்பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.