ககன்யான் திட்டத்தின் கீழ், 2022-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 , ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜூலை 15-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்தார். சந்திராயன் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் இந்தியாவுக்கு நற்பெயர் கிடைத்துள்ளது என்று தெரிவித்த சிவன், சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்ட பிறகு 14-ம் நாளில் நிலவை ஆய்வைத் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
சந்திராயன் 2 விண்கலம் 603 கோடி ரூபாயிலும் அதை செலுத்தும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் 375 கோடி ரூபாய் செலவிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். நிலவுக்கு மனிதனை அனுப்பிய பிறகு விண்வெளியில் இந்தியாவுக்கென தனியாக விண்வெளி ஆய்வு மையத்தினை அமைக்க உள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.