செப் -1 முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி!!

தமிழகத்தில் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திங்கட்கிழமையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் சென்னை பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக கூறியுள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும், ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார். வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version