கொடூர இன அழிப்பின் உச்ச வடிவம் யாழ்ப்பாண நூலக எரிப்பு!

ஹிட்லர் கூட செய்யத்துணியாத கொடூர இன அழிப்பின் உச்ச வடிவம் யாழ்பான நூலக எரிப்பு.

தமிழர்கள் நெஞ்சில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும் அத்துயரச் சம்பவத்தின் 40-ம் ஆண்டு நினைவு தினம் இன்று.

 

தமிழர்களின் தாயக மண்ணான இலங்கையில், தனக்கென ஒரு மிடுக்குடன், பலரின் அறிவுப்பசிக்கு விருந்தாகி, பல அறிவு மேதைகளை உருவாக்கிய கலைமகள், காடையர்கள் இனப்பசிக்கு இரையானாள்.

40 ஆண்டுகள் கடந்து விட்டாலும், ஒவ்வொரு தமிழர் நெஞ்சிலும் அணையா நெருப்பாக எரிந்து கொண்டே இருக்கிறது சிங்கள அரசின் துரோகம்.

1981 ம் ஆண்டு இதே நாளில், ஜெயவர்தனவின் ஆட்சி காலத்தில், திட்டமிட்டு நடத்தப்பட்ட தீ வைப்பு சம்பவம், தமிழ் மக்களின் அடையாளம், அறிவு மற்றும் பண்பாடு ஆகியவற்றை இல்லாதொழிக்கும் தமிழ் இன அழிப்பின் ஓர் அடையாளமாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.

இந்த திட்டமிட்ட தீ வைத்தல் நிகழ்வில், தெற்காசியாவின் பெரிய நூலகம் சாம்பலாக்கப்பட்டது.

நூலத்தில் இருந்த கிடைப்பதற்கரிய 97 ஆயிரம் நூல்களும், பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகளும், தனி நபர் சேமிப்பு புத்தகங்களும் முழுதாக அழித்தொழிக்கப்பட்டன.

அன்று நள்ளிரவில் நூலகம் தீப்பற்றி எரியும் சம்பவம் தெரிந்து, தீயணைப்பு வண்டிகள் விரைந்த போது, அதனை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர் போலீசார்.

சம்பவ இடத்திற்கு செல்ல முயன்ற யாழ் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் சி.வி.கே. சிவஞானத்தின் கார் துப்பாக்கி முனைகளால் சுற்றி வளைக்கப்பட்ட்டு, திருப்பி அனுப்ப பட்டது.

இவ்வாறாக நூலகம் முழுவதுமாக சாம்பாலாகும் வரை அணு அணுவாக ரசித்தது அன்றைய ஜெயவர்தனவின் அரசு.

இரவு 10 மணி அளவில் நுழைந்த கொடியவர்கள், காவலாளியை அடித்து போட்டு விட்டு, அரிய பொக்கிஷங்களின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர்.

காட்டுத் தீ போல கொளுந்து விட்டது எரிந்தது நூலகம்.

சுவர்கள் வெப்பத்தினால் வெடித்து உதிர்ந்தன.

சன்னல் சிதறிப் போயின.

இந்த கொடுமை நிகழ்ந்த போது, அதனை சென் பற்றிக்ஸ் கல்லூரி மாடியில் இருந்து நேரில் பார்த்த தாவீது அடிகள், அந்த கணத்திலேயே உயிரிழந்தார்.

நூலக ஊழியர் பற்குணம் நூல் நிலையம் எரியுண்ட நிலையை கண்டு சித்தம் குழம்பிப் போனார்.

யாழ்ப்பாண நூலக எரிப்பை, எதிர் காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் முன்னோட்டம் என்றே குறிப்ப்பிடுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

நூலகம் முழுவதும் சிதைந்த நிலையில், அதன் முற்பகுதியை மட்டும் அப்படியே பழமை மாறாமல் புதுப்பித்து, ஏனைய பகுதிகளை புதிதாக எழுப்பி, 2004 ம் ஆண்டு நூலகம் மீண்டும் திறக்கப்பட்டது.

இதை, தமிழர்கள் அவர்களின் வெற்றியாக கருதவில்லை.

ஏனெனில், இலங்கை ஆட்சியாளர்களின் நோக்கம் நூலகத்தை அழிப்பதல்ல.

அவர்களின் வரலாற்றை பண்பாட்டை இல்லாமல் அழித்தொழிப்பது.

அதில் அவர்கள் வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

ஆம், இப்போது நூலகம் இயங்கினாலும், அதில் அரிய பொக்கிஷங்கள் எதுவும் இல்லை.

ஆனால், தமிழர்கள் அன்றும் சரி… இன்றும் சரி… எந்த அழிவையும் எதிர் கொள்ள தயாராகவே இருக்கிறார்கள்.

Exit mobile version