புதிய வாகனங்களுக்கு பம்பர் டு பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றுக்கொண்டது.
சாலை விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பொதுக் காப்பீட்டு மன்றம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காப்பீடு நிறுவனங்கள், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் விநியோகஸ்தர்களாக மட்டுமே செயல்படுவதால், ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்களால் சேவைகளில் மாற்றம் செய்ய இயலாது என தெரிவித்திருந்தது. இதனையடுத்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பம்பர் டூ பம்பர் காப்பீட்டு உத்தரவை உடனடியாக அமல்படுத்தும் சூழ்நிலை இல்லை என்பதை கருத்தில் கொண்டு அந்த உத்தரவை திரும்ப பெறுவதாக நீதிபதி அறிவித்தார். அதேசமயம், பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசே உரிய திருத்தங்களை கொண்டு வரும் என்று உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.