கோவை மாவட்டத்தில் குடும்பப் பெண்களை குறிவைத்து குழியில் தள்ளும் ஜேசிபி ஆபரேட்டர் குமாரை கைது செய்ய வேண்டும் என்று புகார் எழுந்துள்ளது. யார் அந்த குமார் தற்போது பார்க்கலாம்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் குமார், வேலைக்காக கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அடுத்துள்ள பாப்பம்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு பிரபு என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கிய அவர், பிரபுவின் மனைவியிடம் ஆசை வார்த்தை கூறி தன் வலையில் சிக்க வைத்ததோடு, வசதிபடைத்த பிரபுவிடமிருந்து பணத்தை கறக்கவும் திட்டமிட்டுள்ளார். அதனால், மூன்றுபேரை வைத்து பிரபுவின் தாயார் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பிரபுவின் மனைவியைக் கடத்திய குமார், தனக்கு ஒரு லட்சம் பணம் கொடுக்கவில்லை என்றால், உன் மனைவியை பெங்களூரு அல்லது மும்பைக்கு கொண்டு சென்று விற்றுவிடுவேன் என போனில் மிரட்டியுள்ளார். மிரட்டல் ஆடியோ ஆதாரத்துடன் பிரபு அளித்த புகாரின் அடிப்படையில், சூலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரித்த போது, அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களிடம் நல்ல நண்பன் போல் சாதுர்யமாகப் பேசி, அவர்களின் கணவர்கள் மீது குற்றம் சுமத்தி குடும்பப் பெண்களை தன்வசப்படுத்துவது தெரியவந்துள்ளது. இந்த தகவலை குமாரின் வலையில் சிக்காத பெண் ஒருவர் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார். பெண்களை கடத்தி தன் வசப்படுத்தி பணம் கேட்டு மிரட்டுவதால், இளம்பெண்கள் கடத்தலிலும் குமாருக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். பல பெண்களை தன் வசப்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நாகர்கோயில் ரோமியோ காசியின் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஜேபி ஆபரேட்டர் குமாரின் விவகாரம், தேனி மாவட்டட்த்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.