"சாத்தியமானவைகளை உள்ளடக்கிய பட்ஜெட்" – அதிமுக ஒருங்கிணைப்பாளர்

2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சாத்திமானவைகளை உள்ளடக்கிய பட்ஜெட் என்றும், அதிமுக சார்பில் வரவேற்பதாகவும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9 புள்ளி 2 ஆக இருக்கும் என்று குறிப்பிட்டிருப்பது, அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைகளை காட்டுவதாக கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதும், இந்த நிதி 50 ஆண்டுகால வட்டியில்லா கடனாக வழங்கப்படும் என்று கூறியிருப்பதும் மாநிலங்களுக்கு பேரூதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் இல்லம் என்ற அடிப்படையில் 80 லட்சம் வீடுகள் கட்ட 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது நிச்சயம் வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கோதாவரி – கிருஷ்ணா, பெண்ணையாறு – கிருஷ்ணா மற்றும் பெண்ணையாறு – காவிரி உள்ளிட்ட 5 நதிநீர் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதை அவர் வரவேற்றுள்ளார்.

வேளாண் வளர்ச்சி மற்றும் வேளாண் நவீனமயமாக்கல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த பட்ஜெட், சாத்தியமானவைகளை உள்ளடக்கிய பட்ஜெட் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version