விவசாயத் துறைக்கு 2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

விவசாயத் துறைக்கு 2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, துறையை மேம்படுத்த 16 அம்சம் கொண்ட திட்டங்களை உருவாக்கியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 நிதி வழங்கும் திட்டத்துக்கு வரும் நிதியாண்டுக்கு பட்ஜெட்டில் 20 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் விவசாயத் துறைக்கு 2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. `2025-ம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை 2 மடங்காக அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கிலும்  நிதி நிர்ணயிக்கபட்டுள்ளது. 

 2021-ம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் கால்நடைகளை தாக்கும் கால், வாய் தொடர்பான நோய்களை தடுக்க  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கம் மிகவும் திவிரமாக இருக்கிறது. தொடர்ந்து விவசாயத் துறையை மேம்படுத்த 16 அம்சம் கொண்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாயும், 2021 ம் ஆண்டிற்கு மட்டும், மருத்துவ திட்டங்களுக்கு 61,000 கோடி ரூபாயும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12, 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிற்துறை மற்றும் வர்த்தக திட்டத்திற்கு 27, 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆயிரத்து 480 கோடி ரூபாயில் தேசிய ஜவுளி தொழில்நுட்பத் திட்டம் விரைவில் உருவாக்கப்படும் எனக்கூறிய அமைச்சர், போக்குவரத்து துறைக்கு மட்டும் 1,70,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கட்டமைப்பு துறையில் 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 5 புதிய பொலிவுறு நகரங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

எரிசக்தி துறைக்கு 22 ஆயிரம் கோடி ரூபாயும், சுற்றுலாத்துறைக்கு  2,500 கோடி ரூபாயும், கலாச்சாரத்துறைக்கு 3,150 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30,757 கோடி ரூபாயும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு 5,958 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version